Sampath Kumaran
9 min readDec 3, 2021

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉NEW

🌞இராமாயணம் தொடர்

🌞யுத்த காண்டம்

🌞பகுதி 74

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️

🌞வீபீஷணன் இராவணன் திருந்த வேண்டி உரைத்த பிரஹலாத சரித்திரம் கம்பரின் கவிநயத்தில் தொடர்சி - 2.

🌞உன்னை இப்போதே கொன்று விடுவேன் என்று இராவணன் அச்சுறுத்தவும்,வீபீஷணன் தன் துணைவருடன் வானத்தில் மேல் எழும்பி, அங்கிருந்தும் இராவணனுக்கு அறிவுரைகள் பல கூறுதல்.

🌞வீபீஷணன் கூறிய அறிவுரைகள் அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்கு போல செல்லாகாசாகி, கற்பூரம் போல காற்றில் கரைந்து போன நிலை.

🌞வீபீஷணன் அறிவுரைகளை ஏற்காத இராவணன் அவனை இப்போதே கொல்வேன் என்று உரைத்த பொழுது,அவன் தன் துணைவர்களுடன் வானில், மேல்லெழும்பி கடல் கடந்து வந்து, ரகுராமன் சேனைவெள்ளத்தை கண்டு வியந்து நின்று, இரவு நேரம் ஆகிவிட்டபடியால் மேலே தொடர்ந்து செல்லாமல் ஒரு சோலையில் தங்குதல்.

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

🌞திருமாலை - நாற்பத்து இரண்டாம்
பாசுரம்

🌞ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்

🌞பழுதிலா வொழுக லாற்றுப்
பலசதுப் பேதி மார்கள்,
இழிகுலத் தவர்க ளேலும்
எம்மடி யார்க ளாகில்,
தொழுமினீர் கொடுமின் கொள்மின்.
என்றுநின் னோடு மொக்க,
வழிபட வருளி னாய்போன்ம்
மதிள்திரு வரங்கத் தானே.

🌞தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருவடிகளே சரணம்

🌞எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—1-

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌞நரசிம்ம அவதாரத்தின் முதல் பகுதியை மீண்டும் சற்று பார்த்து விட்டு இன்றைய பதிவிற்கு செல்வோம்.

🌞ஹிரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா! உன் நாராயணன் என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், ஹிரணியனே பார்த்து,பார்த்து கட்டிய தூணாகும்.பிரகலாதனோ, வேண்டும் என்றால் இந்த தூணை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே! என்று பயப்படாமல் கூறினான்.

🌞ஹிரணியன் ஒரு ஆயுதம் எடுத்து தன் எதிரில் இருக்கும் தூணை தன் கையால் ஓங்கித் தாக்கி,பிறகு காலால் உதைத்தான்.மறுவினாடி அந்த தூண் தூள்,தூளாக வெடித்து இரண்டாகப் பிளந்தது.தூணில் இருந்து சிங்க முகத்தோடு கூடிய நரசிங்க பெருமாள் வெளிப்பட்டார்.

🌞'நசை திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று!" என்ன நக்கு, விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும், திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞ஸ்ரீமந் நாராயணன் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார்.சிங்கம் போன்ற திருமுகத்தில் தாடியுடனும், கோரைப் பற்களுடனும்,சிவந்த கண்களுடனும், தலைக்கு கீழ்பாகம் மனித உடலுடனும்,கூர்மையான நகங்களுடனும் தோன்றினார்.

🌞தன் பக்தனின் சொல்லை நிரூபிக்க உடனே அந்த க்ஷணமே கருடன் மேல் பறந்து வந்தால் கூட தாமதமாகி விடும் என்பதால் உடனே, அந்த தூணை பிளந்து கொண்டு ந்ருஸிம்ஹராய் தோன்றினார் சிங்கவேள்.

🌞புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்மர் இந்த பூமியில் கணப்பொழுதில் அவதரித்தார். திருமாலின் நரசிம்ம வடிவம் எட்டுத் திசைகளையும் தாண்டி வளர்ந்தது. அந்த விசுவரூபத்தை முழுவதுமாகக் கண்டவர் யாரும் இல்லை. ஶ்ரீஹரியின் பெரிய வடிவத்துக்கு இந்த உலகம் ஒரு தூசியைப் போன்று காட்சியளித்தது.கடல் ஒரு துளியைப் போலக் காணப்பட்டது.

🌞பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும் அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்? கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞பெருங்காற்றானது நரசிங்கப் பெருமாளின் சிறுமூச்சுப் போல இருந்தது.தூய்மையான ஆகாயம் அப்பெருமானின் விரல்களுக்கிடையில் காணப்படும் இடைவெளிக்குச் சமமாக இருந்தது. நரசிம்ம பெருமானின் வடிவத்துக்கு முன்னர் ஐம்பூதங்களும் மிகவும் சிறியதாகவே காணப்பட்டன.

🌞நகைசெயா, வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் புகைசெயா, நெடுந் தீப் பொங்க உருத்து, எதிர் பொருந்தப் புக்கான்; தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான் - மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞தூணில் இருந்து தோன்றிய நரசிம்மத்துடன் போர் புரிய ஹிரணியன் தயாரானான்.தன் வாளை உருவினான்.கடல்களும், மலைகளும் அஞ்சுமாறு பெரிய ஆரவாரம் செய்தான்.

🌞தன்னிலும் மேம்பட்டவராக எவரையும் மனதாலும் கருதாத ஹிரண்யன், பிரஹலாதனை இகழ்ந்து சிரித்து, நரசிம்ஹமூர்த்தியை எதிர்த்தான்.

🌞நகைசெயா, வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் புகைசெயா, நெடுந் தீப் பொங்க உருத்து, எதிர் பொருந்தப் புக்கான்; தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான் - மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌞அப்போது பிரஹலாதன்,தந்தை ஹிரண்யனைத் தடுத்து "நீ உய்ய வேண்டுமானால் சங்கும் சக்கரமும் ஏந்திய திருமாலை வணங்கி நற்கதி அடைவாயாக!" என்று இந்த கட்டத்திலும் அன்புடன் வேண்டிக் கொண்டான்.

🌞ஹிரணியன் எக்காளமாக சிரித்து முடிப்பதற்குள் அவனை நரசிம்மப் பெருமான் தன் கைகளால் பற்றினார்.

🌞'வாளொடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த நீள் இருங் கனக முட்டை நெடுஞ் சுவர் தேய்ப்ப, நேமி கோளொடும் திரிவது என்னக் குல மணிக் கொடும் பூண் மின்ன, தாள் இணை இரண்டும் பற்றிச் சுழற்றினன், தடக் கை ஒன்றால்

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞அந்நிலையில் நரசிம்ஹம்
ஹிரண்யனுடைய இரண்டு கால்களையும் தன் ஒரு கையால் பற்றிச் சுழற்றி,அந்தி நேரமாகிவிட்ட அந்த நேரத்தில்,அரண்மனை வாயிற்படியில் அமர்ந்து,

🌞பகலாகவோ இரவாகவோ இல்லாத சந்தியா வேளையில், அரண்மனை உள்ளேயோ, வெளியேயோ இல்லாமல் , மனிதனாகவோ, மிருகமாகவோ, தேவராகவோ, பறவையாகவோ இல்லாமலும்,நிலத்திலோ,

🌞தரையிலோ அல்லது ஆகாயத்திலோ இல்லாமல் அவனைத் தொடைமேல் தாங்கிக் கொண்டு,ஈரமுள்ல உடல் உறுப்புகளாலோ அல்லது ஆயுதங்களாலோ அன்றி ,தன் கைகளின் வஜ்ர நகங்களினால் அவன்,நெஞ்சைப் பிளந்தார்

🌞"ஆயவன் தன்னை, மாயன் அந்தியின், அவன் பொன் கோயில்
வாயிலில், மணிக் கவான் மேல், வயிரவாள் உகிரின், வானின்
மீஎழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு
தீஎழப் பிளந்து நீக்கி தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்".

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞அவனை தன் தொடை மேல் கிடத்தி, தன் கூர்மையான நகங்களால் அவன் மார்பினைப் பிளந்தார்.குருதி பொங்கக் ஹிரணியனது வயிற்றைக் கிழித்து, அவன் குடலை மாலையாக இட்டுக் கொண்டு அவனை வதம் செய்து, உயிரைக் குடித்தார் சிங்கவேள்.

🌞'"போன்றன இனைய தன்மை; பொருவியது இனையது" என்று தான் தனி ஒருவன் தன்னை உரைசெயும் தரத்தினானோ? வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் ஊன்றலும், உதிர வெள்ளம் பரந்துளது, உலகம் எங்கும்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு
ஓர்ஆள் அரியாய் அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த
புனிதன இடம்; பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு
பத்திமை யால் அடிக்கீழ் செங்கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவே.ழ் குன்றமே

🌞சிங்கவேள் குன்றம் பாசுரம்

🌞ஹிரண்யனுக்கு அஞ்சி முன்பு ஓடி ஒளிந்த பிரமதேவர்,ருத்ரன் முதலானோர் பயம் நீங்கித் திரும்பி வந்தனர்.கூடிய அனைவரும் நரசிம்ஹத்தின் பேருருவையும், இரத்தம் படிந்த பயங்கரத் தோற்றத்தையும் கண்டு அஞ்சி நடுங்கி,போற்றி துதித்தனர்.

🌞முக்கணான், எண்கணானும், முளரி ஆயிரம் கணானும், திக்கண் ஆம் தேவரோடு முனிவரும், பிறரும், தேடிப் புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார், "எக் கணால் காண்டும், எந்தை உருவம்" என்று, இரங்கி நின்றார்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8

🌞சிங்கவேள் குன்றம் பாசுரம்

🌞ஹிரணியன் இறந்தது கண்டு எல்லோரும் ஆரவாரம் செய்தனர். ஆனால் நரசிம்மரின் ஆக்ரோஷம் மட்டும் தணியவில்லை.

🌞பிரமதேவர் நரசிம்ஹத்தைத் துதித்துப் போற்ற,நரசிம்ஹன் பொங்கி மேலெழுந்து நின்ற கோபத்தை உள்ளடக்கிக் கொண்டு "அஞ்சாதீர்கள்" என்று அபயம் அளித்தார்.

🌞'"தன்னைப் படைத்ததுவும் தானே எனும் தன்மை பின்னைப் படைத்ததுவே காட்டும்; பெரும் பெருமை உன்னைப் படைத்தாய் நீ என்றால், உயிர் படைப்பான் என்னைப் படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ?

🌞"நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால், என்னுளே, எப் பொருளும், யாவரையும் யான் ஈன்றேன்; பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே! பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே போல்கின்றேன்."

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟩

🌞நரசிம்ஹ மூர்த்தியின் கோபம் சற்று தணிய,அவர் அருகே செல்ல பயப்பட்ட அமரர்களும்,பிறரும், பிராட்டியாகிய மகாலக்ஷ்மியின் திருவடிகளை வணங்கி, போற்றி நரசிம்ஹ மூர்த்தியின் அருகே சென்று அவரை அமைதிப்படுத்த வேண்டினர்.

🌞'பூவில் திருவை, அழகின் புனை கலத்தை, யாவர்க்கும் செல்வத்தை, வீடு என்னும் இன்பத்தை, ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை, தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல.

🌞மங்கை ஒரு பாகன் முதல் அமரர், மா மலர்மேல் நங்கைதனை ஏவுதலும், நாராயணக் கடவுள் சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி, பொங்கு பரஞ் சுடராய் எங்கும் பொலிய நின்றான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞நரசிம்ஹரும் சினம் தணிந்து திருமகளை அன்போடு நோக்கினார். இருந்தும் கூட நரசிம்மரின் சினம் முழுமையாக தணியவில்லை. கூடியிருந்தோர் அனைவரும் நரசிம்ஹத்தைப் போற்றி தூதித்தனர்.

🌞'செந் தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் நந்தா விளக்கை, நறுந் தார் இளங் கொழுந்தை, முந்தா உலகும் உயிரும் முறை முறையே தந்தாளை, நோக்கினான், தன் ஒப்பு ஒன்று இல்லாதான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞பலரும் வேண்டி நின்றும் ஶ்ரீ ஹரியின் சீற்றம் முழுமையாக தணியவில்லை.ஆனால் பிரஹலாதன் மட்டும் நரசிம்மரின் திருவடிகளை வணங்கி, ஆனந்தத்தில் மூழ்கியிருந்தான்.

🌞'"ஓம் அரியாய நம்!" என ஒழிவுறாது ஓதும் நாம நான் மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம், காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர் - ஆம் அது ஓதுகில், அவன் தனக்கு ஒப்பவர் யாரோ?

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞சிறுவனாகிய பிரஹலாதனின் பக்தியைக் கண்டு உள்ளம் குளிர்ந்து நரசிம்மப்பெருமானின் கோபம் தணிந்தது.பிரகலாதனை அன்புடன் தன் கரங்களால் தடவிக் கொடுத்து ஆசீர்வதித்தார் நரசிம்மர்.

🌞தீது இலாஆக உலகு ஈன்ற தெய்வத்தைக் காதலால் நோக்கினான்; கண்ட முனிக் கணங்கள் ஓதினார், சீர்த்தி; உயர்ந்த பரஞ்சுடரும், நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞தனது தந்தை ஹிரணியன் மரணத்துக்குத் தானே காரணமாக இருந்து,அவன் தன் கண் முன்னாலேயே மாண்டபோதும், தன்னிடம் பேரன்பும் பக்தியும் பூண்டு நிற்கும் பிரஹலாதனைப் பாராட்டிய நரசிம்ஹ மூர்த்தி உனக்கு நான் செய்ய வேண்டியது எதுவாயினும் கேள் என்று கேட்டார்.அதற்கு பிரஹலாதன் பதில் உரைத்தான்:

🌞"உந்தையை உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய, சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்! அந்தம் இலா அன்பு என் மேல் வைத்தாய்! அளியத்தாய்! எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது?" என்றான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵

🌞பிரஹலாதா! நீ விரும்பும் வரத்தைக் கேள்! என்று நரசிம்மப் பெருமாள் மீண்டும் கேட்டார்.

🌞உடனே பிரஹலாதன் உம்மை அன்புடன் வழிபடும் வரம் ஒன்றே எனக்கு வேண்டும்.என்னை எப்போதும் தங்கள் பக்திலேயே வைத்திருக்கும் பாக்யம் வேண்டும்.
"புழுவாய்ப் பிறக்கினும் நின் திருவடிகளைப் பணிந்து, நின் அருளைப் பெற அருள் புரிவாய்!" என்று வேண்டினான்

🌞'"முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை; பின்பு பெறும் பேறும் உண்டோ ? பெறுகுவெனேல், என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின் அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்" என்றான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞பிரஹலாதன் சொன்னதைக் கேட்டுத் திருமால் உள்ளம் குளிர்ந்தார்.நரசிம்ஹ மூர்த்தி பக்த பிரஹலாதா!

🌞ஐம்பெரும் பூதங்கள் அழியினும், நீ என்றும் பஞ்ச பூதங்கள் போல அழிவற்று சிரஞ்ஜீவியாய் நிலைத்திருப்பாய். உலக உயிர்கள் அனைத்தும் என்னைப் பணிந்து பெறும் நற்பயன்களை,நின்னைப் பணிந்தும் பெறட்டும்.அசுரர்களுக்கு மட்டுமன்றி தேவர்களுக்கும் நீயே! அரசன்" என்று வரம் அளித்தார்.

🌞'அன்னானை நோக்கி, அருள் சுரந்த நெஞ்சினன் ஆய், "என் ஆனை வல்லன்" என மகிழ்ந்த பேர் ஈசன், "முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும், உன் நாள் உலவாய் நீ, என் போல் உளை" என்றான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞நீ விரும்பவில்லை என்றாலும், சில காலம் இவ்வுலகத்தை ஆளும் பேரரசனாக அனைவரும் போற்ற ஆட்சி புரிந்து விட்டு வருவாயாக! உலக இன்பத்தை அனுபவித்த பின்னர் என்னிடம் வந்து சேர்வாயாக என்றும் நரசிம்மர் அருளினார்.

🌞நல் அறமும் மெய்ம்மையும், நான் மறையும், நல் அருளும், எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப் பொருளும், தொல்லை சால் எண் குணனும், நின் சொல் தொழில் செய்ய, மல்லல் உரு ஒளியாய்! நாளும் வளர்க, நீ!"

🌞என்று வரம் அருளி, "எவ் உலகும் கைகூப்ப, முன்றில் முரசம் முழங்க, முடி சூட்ட, நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து, இவனுக்கு ஒன்று பெருமை உரிமை புரிக!" என்றான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠

🌞மேலே கண்டபடி நரசிம்ஹப் பெருமாள் பிரஹலாதனுக்கு வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதித்தார்.

🌞நரசிம்ம பெருமான் வழி காட்ட, பிறகு பிரமதேவன் ஹோமம் வளர்த்து வேள்விச் சடங்குகளைச் செய்து ,பிரஹலாதனுக்கு முடி சூட்டினார்.

🌞அரசபதவி ஏற்றபின், நரஹரியின் திருநாமத்தை அன்புடன் சொல்லி, திருமகளோடு இனிது அமர்திருக்கும் லக்ஷ்மி நரசிம்மரை வணங்கினான் பிரஹலாதன்.அனைவரும் பயம் நீங்கித் திருமாலின் திருவடிகளை வணங்கித் துதித்தனர்.

🌞பிரஹலாதனை நரசிம்ம பெருமான் மூவுலகங்களுக்கும் அரசனாக்கினார்.

🌞'தே, மன், உரிமை புரிய, திசை முகத்தோன் ஓமம் இயற்ற, உடையான் முடி சூட்ட, கோ மன்னவன் ஆகி, மூஉலகும் கைக்கொண்டான் - நாம மறை ஓதாது ஓதி, நனி உணர்ந்தான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪

🌞அனைவருக்கும் வரங்கள் தந்து மறைந்தார் வைகுந்தவாசன் ஶ்ரீமன் நாராயணன்.நாராயணா! எனும் நாமம் எங்கும் ஓங்கி ஒலித்தது.

🌞ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதல் ஆய், தாது உலாவிய தொடைப் புயந்து இரணியன் தமரோடு ஆதி நாள் அவன் வாழ்ந்தனன்; அவன் அருந் தவத்துக்கு ஏது வேறு இல்லை; யார் அவன்போல் தவம் இழைத்தார்?

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞பிரஹலாதனின் பக்தியின், அன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தவே திருமால் நரசிம்மப்பெருமானாக அவதாரம் எடுத்தார்.தன்னை மனம் உருகி அழைப்பவர்களுக்கு நொடியில் வந்து உதவி செய்வதை நரசிம்ம அவதாரம் நமக்கு உணர்த்துகிறது.

🌞அது மட்டுமின்றி முழுமுதல் கடவுள் ஶ்ரீமன் நாராயணன் எங்கும் உள்ளார் என்பதை நரசிம்ம அவதாரம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫

🌞இந்த வரலாற்றைக் கூறி முடித்த விபீஷணன் இராவணனிடம் "எம் வேந்தனே! இது முன்னர் நடந்த வரலாறு. நான் உரைத்த இவ்வறிவுரையில் ஏதேனும் பொருள் இருக்குமானால் அதனை ஏற்று அதன்படி நட! இல்லையேல், இதனை இகழ்வாய் ஆயின், அதனால் உனக்குத் தீங்கு விளைதல் உறுதி" என்று எடுத்து கூறினான்.

🌞ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம்பெருமான்! என் மாற்றம் யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல், தீது ஆய் விளைதல் நனி திண்ணம்' எனச் செப்பினான்- மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞தன் தம்பி வீபீஷணன் கூறிய அறிவுரைகளை இராவணன் செவிகள் கேட்டனவே தவிர,அவன் வஞ்சக மனம் சீதையைப் பற்றிய கனவுகளிலேயே இருந்ததால்,அந்த அறிவுரைகள் எதுவும் இராவணன் மனதில் ஏறவில்லை. விபீஷணன் மீது அளவற்ற கோபம் கொண்டான் இராவணன்.

🌞கேட்டனன் இருந்தும், அக் கேள்வி தேர்கலாக் கோட்டிய சிந்தையான், உறுதி கொண்டிலன், - மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான் - ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞வீபீஷணா! "ஹிரண்யன் எம்மை விட வலிமையுடையவனா?என்ன?அவனைக் கொன்றதால் திருமால் வலிமையுடையவனோ?அவன் மீது உனக்கு ஏன் இவ்வளவு பக்தி?"

🌞'"இரணியன் என்பவன் எம்மனோரினும் முரணியன்; அவன் தனை முருக்கி முற்றினான், அரணியன்" என்று, அவற்கு அன்பு பூண்டனை - மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்!

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞"தந்தையான ஹிரண்யனைத் தன் கண் எதிரிலேயே கொன்ற போதும் வருந்தாத பிரஹலாதனும்,நீயும் எனக்கு ஒன்றுதான்.

🌞'ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும், ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய் நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ?

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞ஹிரண்யனைக் கொன்று பிரஹலாதன் செல்வத்தையும் ராஜ்யத்தையும் அடைந்ததைப் போல,உனக்கும் இலங்கை ராஜ்யத்தை ஆள ஆசை ஏற்பட்டுவிட்டது போல இருக்கிறது! அதனால்தான்,ராம லக்ஷ்மணரிடத்து உனக்கு இவ்வளவு பரிவும் பாசமும் ஏற்பட்டிருக்கிறது. போலும்! நீ போய் அவர்களிடமே அடைக்கலம் கொள்!".

🌞'பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என, சூழ்வினை முற்றி, யான் அவர்க்குத் தோற்றபின், ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்தி, பின் வாழவோ கருத்து? அது வர வற்று ஆகுமோ?

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞"பகைவனிடம் அச்சம் கொண்ட நீ போர் செய்ய உடன்பட மாட்டாய்! எனக்கு எவ்விதத்திலும் உதவமாட்டாய்! உன்னை உடன் வைத்துக் கொள்வது எனக்கு நல்லதும் அல்ல.நீ உடன் பிறந்தே கொல்லும் வியாதி!

🌞உன்னைக் கொன்றால் தம்பியைக் கொன்ற பழி எனக்கு வரும் என்பதால்,நான் உன்னைக் கொல்லவில்லை.எனக்கு உபதேசம் செய்வதை உடனே நிறுத்திக் கொள்!

🌞இனியும் நீ என் கண்முன் நிற்காதே! இங்கிருந்து உடனே ஓடிப்போய்விடு! மேலும் இங்கு தாமதித்தால் என் கையாலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று இராவணன் சினத்துடன் விபீஷணனை எச்சரிக்கை செய்து , அச்சுறுத்தினான் .

🌞'அஞ்சினை ஆதலின், அமர்க்கும் ஆள் அலை; தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை; வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாறினை; நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ?

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞இராவணனுக்கு விபீஷணன் எடுத்துரைத்த நீதிகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது.விதி வழியில் மதி செல்கிறது.பேரழிவை நோக்கிச் செல்லும் இராவணனுக்கு அறிவு கொஞ்சம் கூட வேலை செய்யவில்லை.

🌞"பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன் உனை
ஒழி சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல், விளிதி என்றனன்
அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்".

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🌞இங்ஙனம் இராவணன் வெகுண்டு உரைத்ததும், விபீஷணன் தன் துணைவர்கள் சிலருடன் அவ்விடத்திலிருந்து மேலே எழும்பி வானத்தில் சென்று,அங்கு தன் துணைவர்களுடன் ஆலோசனை நடத்தியபின்,தன் அண்ணன் அழித்து விடுவானோ! என்ற கவலையினால் மீண்டும் அவனுக்குச் சில நீதிகளை எடுத்துரைக்க தொடங்கினான்.

🌞என்றலும், இளவலும் எழுந்து, வானிடைச் சென்றனன்; துணைவரும் தானும் சிந்தியா - நின்றனன்; பின்னரும், நீதி சான்றன, ஒன்று அல பலப்பல, உறுதி ஓதினான்:

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞"இராவணா! நான் சொல்வதைக் கேள்! ஊழிக்காலம் வரை செல்வச் செருக்கோடு வாழ வேண்டிய நீ கீழோர் சொல் கேட்டு அழிய நினைக்கிறாய்!

🌞தர்மம் தவறினால் நல்வாழ்வு கிட்டுமா? உன் மக்கள், குரு முதலானவர்களையும், உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோரையும் களபலி கொடுத்துவிட்டு நீ அந்தப் பேரழிவைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா?" என்ன!

🌞புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர், மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர், இத்தனை பேரையும், இராமன் வெஞ் சரம் சித்திரவதை செயக் கண்டு, தீர்தியோ?

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞"உனக்கு எத்தனை நீதிகளை எடுத்து சொன்னேன். அவற்றையெல்லாம் ஒருபோதும் நீ உணரவில்லை.என் தந்தைக்கு ஒப்பானவனே! என் பிழையைப் பொறுத்துக் கொள்!" என்று இறுதியாக சொல்லிவிட்டு, வானவழியாக இலங்கையை விட்டு நீங்கிச் சென்றான் விபீஷணன்.

🌞இனி என்ன செய்வது? என்று நினைத்து தன் துணைவர்களாக வந்து சேர்ந்து கொண்ட அந்த நான்கு அமைச்சர்களோடும் விபீஷணன் இலங்கையை விட்டு நீங்கினான்.

🌞கடலின் மறு கரையில் பெரிய கடல் போன்ற வானர சேனையோடு வந்து தங்கியிருக்கிற விஜயராகவனிடம் சென்று தஞ்சமடைவோம்! என்று புறப்பட்டார்கள்.

🌞ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது; தூயது, நினைந்தது; தொல்லை யாவர்க்கும் நாயகன் மலர்க்கழல் நணுகி, நம் மனத்து ஏயது முடித்தும்' என்று இனிது மேயினான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞உத்தமமான விபீஷணனுடன் நான்கு அமைச்சர்களும் சேர்ந்து கொண்டு அவனுடன் சென்றனர். அவர்கள் அனலன்,அனிலன்,அரன், சம்பாதி ஆகியோராவர்.

🌞அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும், வினையவர் நால்வரும், விரைவின் வந்தனர், - கனை கழல் காலினர், கருமச் சூழ்ச்சியர், - இனைவரும் வீடணனோடும் ஏயினார்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌞தன் துணைவர்களோடு பெருங்கடலைக் கடந்து வானவழியாக பயணம் செய்து, அக்கரையில் தங்கியிருந்த கடல் போன்ற வானரப் படையைக் கண்டான் விபீஷணன்.இப்போது நாம் என்ன செய்யலாம் என்று அமைச்சர்களோடு விபீஷணன் கலந்து ஆலோசித்தான்.

🌞அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும், விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல் வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என, களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞அவர்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் தாழ்வு இல்லாத ஞானப் பொருளாகவும்,தர்மத்தின் வடிவாகவும் விளங்குகின்ற வீரராகவனை சென்று காண்பதே! இப்போது நமது கடன் என்று முடிவு செய்தார்கள்.

🌞மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை; தாழ்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியைக் காட்சியே இனிக் கடன்' என்று, கல்வி சால் சூழ்ச்சியின் கிழவரும், துணிந்து சொல்லினார்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞விபீஷணன் தன்னுடன் வந்தவர்களைப் பார்த்து சொல்கிறான்:

🌞"வீரராகவனை நான் முன்பு பார்த்ததும் இல்லை.அவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதும் இல்லை. எனினும் அவரைப் பற்றி எண்ணுகின்ற போது எனது எலும்புகள் உருகுகின்றனவே! உள்ளத்தில் அன்பு மேலிடுகிறது. அந்த ரகுராமன், நமது பிறவி நோய்க்கு மருந்தாக வந்திருக்கிற இறைவன்தானோ?"

🌞முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்; அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்; என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன் புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌞கடல் கடந்து வந்த விபீஷணனும் அவனுடன் வந்தவர்களும், ரகுவீரனும் வானரப் படைகளும் தங்கியிருக்கிற பகுதிக்கு வந்து சேர்ந்தபோது,இரவு நேரம் வந்துவிட்டது.இந்த இரவு நேரத்தில் புதியவர்களான நாம் சென்று ஶ்ரீராமனை காண்பது இயல்பானதாக இருக்காது.

🌞ஆகையால் நாம் இன்று இரவை ஒரு மரச் சோலையில் கழித்து காலையில் சென்று கோதண்டராமரை காணலாம் என்று முடிவு செய்து, அங்ஙனமே சோலையில் போய்த் தங்கினர்.

🌞இருளிடை எய்துவது இயல்பு அன்றாம்' என, பொருள் உற உணர்ந்த அப் புலன் கொள் கேள்வியார், மருளுறு சோலையின் மறைந்து வைகினார்; உருளுறு தேரவன் உதயம் எய்தினார்.

🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்

🌀🌀💠🌀💠🌀💠🌀💠🌀💠🌀🌀💠🌀

🌀வளரும் ...... 🌀ஶ்ரீராமஜெயம்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🍒 சுபமஸ்து 🙏 தீர்காயுஷ்யமஸ்து.

💥 ஶ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே.
💥 ஶ்ரீமதே நாராயணயாய நம:

✳️ ஶ்ரீமதே ராமானுஜாய நம:
🙏 ராமானுஜ தாஸன் சம்பத்குமாரன்.
💥பாக்யம். 🌞

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Sampath Kumaran

Post Graduate in Mathematics Worked in BSNL as Senior Sub Divisional Engineer Astrologer Religious Story Writer