🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉NEW
🌞இராமாயணம் தொடர்
🌞பகுதி 100
🌞யுத்த காண்டம்
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
🌞மகன் இந்திரஜித் இறந்த செய்தி கேட்டு மண்டோதரி, அழுது அரற்றி புலம்புதல்.
🌞மண்டோதரியின் புலம்பல் ஒலி கேட்ட ராவணன்,அசோகவனத்தில் சிறையில் இருக்கும் சீதையை
உடனே கொல்வேன்,என்று கோபத்துடன்,உடைவாளோடு, புறப்படுதல்.
🌞அசோகவனம் செல்ல புறப்பட்ட ராவணனை,பெண் கொலைபுரிவது பாவச்செயல்,என்று சொல்லி மகோதரன் ,தடுத்து நிறுத்தல்.
🌞உலகம் முழுவதும் உள்ள அரக்கர்களை,இலங்கைக்கு உடனே வரவேண்டும்,என்று தூதர் மூலம் ராவணன் செய்தி அனுப்புதல்,
🌞மூலபலபடையோடு ரகுராமன் போர் புரிய தொடங்குதல்.
🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵
🌞108 திவ்ய தேசங்கள் பாடல்கள் தொகுப்பு.
🌞21.திருநந்திபுரவிண்ணகரம்
🌞செயற்கரிய செய்வோமைச் செய்யாம னெஞ்சே!
மயக்குவா ரைவர் வலியால் - நயக்கலவி
சிந்திபுர விண்ணகர மென்பர்திருச் செங்கண்மால்
நந்திபுர விண்ணகர நாடு. (21)
🌞22. திருவிந்தளூர்
🌞நாடுதும்வா! நெஞ்சமே! நாராய ணன்பதிகள்
கூடுதும்வா! மெய்யடியார் கூட்டங்கள் - சூடுதும்வா!
வீதியிந்த ளத்தகிலின் வீசுபுகை வாசமெழும்
ஆதியிந்த ளூரா னடி. (22)
🌞108 - திருப்பதிகள் அந்தாதி - பிள்ளை பெருமாள், ஐயங்கார் திருவடிகள் சரணம்.
🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫
🌞இந்திரனை வென்ற இந்திரஜித்தை,மானிடன் லக்ஷ்மணன் கொன்றுவிட்டான் என்பதை நினைத்து, மிகவும் கோபங்கொண்ட ராவணன் போர்க்களத்திற்குச் சென்று, இந்திரஜித்தின் உடலைக் தேடி எடுத்து,கதறி அழுதான்.
🌞'வாய்ப் பிறந்தும், உயிர்ப்பின் வளர்ந்தும், வான் காய்ப்பு உறும்தொறும் கண்ணிடைக் காந்தியும், போய்ப் பிறந்து, இவ் உலகைப் பொதியும் வெந் தீப் பிறந்துளது, இன்று' எனச் செய்ததால்.
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞மேகநாதா! எனக்கு முன் நீ மாண்டு போனாயே! உன் ஆற்றல் மேரு மலையை போன்றது அல்லவா!. நீ எனக்குச் செய்ய வேண்டிய, கடைசி நேர ஈமச்சடங்குகளை, நான் உனக்கு செய்யும் படி, விதி கோரமாக விளையாடி,இப்படி செய்துவிட்டதே. நீ இறந்து போன பிறகும் நான் இன்னும் உயிர் தரித்து உள்ளேனே! என்று வெந்த புண்ணில், வேல் பாய்ந்ததை போல,கதறி அழுதான் இராவணன்.புத்திரன் இறந்து போன சோகத்தை, ராவணால் தாங்கி கொள்ள, முடியவில்லை.
'🌞மைந்தவோ!' எனும்; 'மா மகனே!' எனும்; 'எந்தையோ!' எனும்; 'என் உயிரே!' எனும்; 'உந்தினேன் உனை; நான் உளெனே!' எனும்;- வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான்.
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞நீ இறந்த செய்தியை அறிந்து இந்திரன் முதலான தேவர்கள், மேகநாதன் என்ற ஒரு தீராப்பகை நிரந்தரமாக நீங்கி விட்டது என்று கைகொட்டி சிரித்து, மகிழ்ந்திருப்பார்களே! நீ இன்றி இனி நான் தனியாக,இந்த உலகில் என்ன செய்யப் போகிறேன்! என தலையில் அடித்துக் கொண்டு, பலவாறு,புலம்பி கதறி அழுதான் ராவணன்.
🌞புரந்தரன் பகை போயிற்று அன்றோ!' எனும்; 'அரந்தை வானவர் ஆர்த்தனரோ!' எனும்; 'கரந்தை சூடியும், பாற்கடல் கள்வனும், நிரந்தரம் பகை நீங்கினரோ!' எனும்
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞போர்களத்தில் இந்திரஜித் உடலையும்,கையையும் பிணகுவியலில் இருந்து,சிரமப்பட்டு தேடி எடுத்த ராவணன்,அந்த மானிடன் இலக்குவன் உன் தலையை எங்கே கொண்டு போய் சேர்த்தானோ! என அழுதான். மேகநாதனின்,கழுத்தில் இருந்து,விடுபட்ட தலையை மட்டும் எங்கு தேடியும்,காணாது வருந்தினான்.
🌞கண்டிலன் தலை; 'காந்தி, அ(ம்) மானிடன் கொண்டு இறந்தனன்' என்பது கொண்டவன், புண் திறத்தன நெஞ்சன், பொருமலன், விண் திறந்திட, விம்மி, அரற்றினான்:
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞ஆறாத் துயரம் அடைந்த இலங்கை வேந்தன். ராவணன் இந்திரஜித்தின், தலையற்ற உடலையும், வில்லோடு அறுப்பட்ட கையையும்,சேர்த்து எடுத்து கொண்டு,அரண்மனைக்குச் கொண்டு சென்று,பஞ்சு மெத்தையில், சடலத்தை படுக்க வைத்து கண்ணீர் சிந்தி, கதறி,அழுதான் .
🌞பொங்கு தோள் வளையும் கணைப் புட்டிலோடு அங்கதங்களும் அம்பும் இலங்கிட, வெங் கண் நாகம் எனப் பொலி மெய்க் கையைச் செங் கையால் எடுத்தான், சிரம் சேர்த்தினான்.
🌞 கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌞இந்திரஜித் இறந்து போன செய்தி முறையாக,அவன் தாய் மண்டோதரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு மகனே! என அழுது அலறிக் கொண்டு, இந்திரஜித், காலடியில் வந்து வீழ்ந்தாள் மண்டோதரி.
🌞என் அன்பு செல்வமே! இனி உன்னை நான் என்று காண்பேன்! எவரும் வெல்ல முடியாத, வலிமை உன்னிடம் இருந்தததே! நீ சிறு வயதில் அரண்மனைக்கு சிங்க குட்டிகளை கொண்டு வந்து, அவற்றிற்கு,சினமூட்டி விளையாடி மகிழ்வாயே! அது போன்ற காட்சியை இனிமேல் நான் எப்போது காணப் போகிறேன்!
🌞தலையின்மேல் சுமந்த கையள், தழலின்மேல் மிதிக்கின்றாள்போல் நிலையின்மேல் மிதிக்கும் தாளன், ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள், கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங் கணை உயிரைக் கொள்ள, மலையின் மேல் மயில் வீழ்ந்தென்ன, மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்.
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞மேகநாதன் இறந்தவுடன் வாய்விட்டு அழுவதற்கு மண்டோதரிக்கு,ஒரு வாய்ப்புக் கிடைத்தது; சேர்த்து வைத்த துயரமெல்லாம்,ஒப்பாரி வடிவம் பெற்றது.
🌞உனக்கு நேர்ந்த இந்த நிலைமை தானே, நாளை உன் தந்தைக்கும் உண்டாகும் எனக் கூறி, புலம்பி அழுதாள் மண்டோதரி.இந்திஜித்தின் மனைவியர்களும்,இந்திரஜித்த்தின் உயிரற்ற உடலை கண்டு கதறி அழுதனர்.இலங்கையில் உள்ள அரக்கர்கள் அத்தனை பேரும் இந்திரஜித் மாண்ட செய்தியை அறிந்து,கதறி அழுதனர்.
🌞'பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம் வெஞ் சின மனிதர் கொல்ல, விளிந்ததே; மீண்டது இல்லை; அஞ்சினேன் அஞ்சினேன்; அச் சீதை என்று அமுதால் செய்த நஞ்சினால், இலங்கை வேந்தன் நாளை இத் தகையன் அன்றோ?'
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞“ஒப்பு யாரும் இல்லாத அந்தச் சீதையால்தான் இந்தக் கதி இலங்கைக்கு வந்தது” என்று, மண்டோதரியின், ஒப்பாரி சொல்லாமல் சொல்லியது;அவள் அழுது அரற்றிய,சொற்கள் ஈட்டிபோல்,ராவணன் நெஞ்சில் பாய்ந்தன;
🌞இராவணன் இவற்றை எல்லாம் கண்டு, மிகவும் கோபம் கொண்டான்.
இவ்வளவு துயரமும் சீதையினால் அன்றோ வந்தது; அவளை இப்போதே கொன்று விடுகிறேன்! என்று தன் உடைவாளை உருவிக் கொண்டு, அசோகவனத்தை நோக்கிச் சென்றான்.
🌞என்று அழைத்து இரங்கி ஏங்க, 'இத் துயர் நமர்கட்கு எல்லாம் பொன் தழைத்தனைய அல்குல் சீதையால் புகுந்தது' என்ன, 'வன் தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை, வாளால் கொன்று இழைத்திடுவென்' என்னா ஓடினன், அரக்கர் கோமான்
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞இராவணனை தடுக்க,அவன் மந்திரிமார்களும்,ராவணனின் மனைவியர்களும் எவ்வளவோ முயற்சித்தும்,முடியாமல் போயிற்று.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌞சீதையை கொல்ல வேண்டும் என்று வாளோடு புறப்பட்ட இராவணனை, மகோதரன் தடுத்து நிறுத்தினான்.மகோதரன் இராவணனனிடம்,அரசே! சற்று பொறுமையாக இருங்கள். அவரப்பட்டு,இந்த அநியாய செயலை செய்து விடாதீர்கள்.
🌞ஒரு பெண்ணை கொல்வது சுத்த வீரனுக்கு அழகல்ல.அவ்வாறு
தாங்கள் கொன்றாலும்,தேவர்கள் முதலானோர் தங்களை பார்த்து, கைக்கொட்டி சிரிப்பார்கள்.
🌞“கொட்டிய பாலை,கீழே இருந்து எடுக்க முடியாது; வெட்டிய சீதையைத் திரும்பப் பெறமுடியாது. ஒருவேளை,அந்த மானிடன் ராமனை போரில் நீங்கள் வெற்றி கண்டு, வெற்றி வீரனாக இலங்கை வரும் பொழுது, சீதை உயிருடன் இல்லாமையை கண்டால், வெறுமையைத்தான், உணர்வீர்கள். எனவே, தங்கள் புதல்வன் மேகநாதன் தலையை சீவி, எடுத்து சென்ற, அந்த மானிடர் இருவருக்கும், தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்.
🌞இன்று நீ இவளை வாளால் எறிந்தனை, இராமன் தன்னை வென்று மீண்டு, இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ? பொன்றினள் சீதை; இன்றே, புரவல! புதல்வன் தன்னைக் கொன்றவர் தம்மைக் கொல்லக் கூசினை கொள்க!' என்றான்
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞கண்கெட்டபின் கதிரவனை வணங்க முடியாது; சித்திரத்தைச் சிதைத்து விட்டால் வெற்றுச் சுவர்தான் எஞ்சி நிற்கும்” என்று அடுக்கு மொழி பல கூறிச், சாம்பல் படிந்த நெருப்பை குப்பென்று ஊதி, மேலும் கனல் பொங்க செய்தான் மகோதரன்;
🌞மேலும் அளவற்ற வரங்களை
தங்களுக்கு அள்ளித்தந்த பிரம்ம தேவனும், சிவபெருமானும், திருமாலும், மானிடர் இருவரை கூட போரில் வெல்ல முடியாத,தங்கள் இயலாமையை கண்டு, கைகொட்டி சிரிப்பார்கள் என மகோதரன் மேலும் கூறி ராவணனுக்கு சினமூட்டினான். சீதை மேல் கொண்ட தீராத ஆசை, ராவணனைத் சீதையை கொல்ல முடியாமல், தடுத்து நிறுத்தியது.
🌞'மங்கையை, குலத்துளாளை, தவத்தியை, முனிந்து, வாளால் சங்கை ஒன்று இன்றிக் கொன்றால், "குலத்துக்கே தக்கான்" என்று, கங்கை அம் சென்னியானும், கண்ணனும், கமலத்தோனும், செங் கையும் கொட்டி, உன்னைச் சிரிப்பரால், "சிறியன்" என்னா.
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞அரசே! தங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தால் அதை ராம லக்ஷ்மணர் மேல் காட்டுங்கள். சீதையை கொன்றுவிட்டு, நாளை போரில் ராமனையும், இலட்சுமணனையும் வெல்வதில் என்ன பயன் உள்ளது? அதனால் தாங்கள்,இந்த சந்தர்ப்பத்தில் பொறுமையாக இருக்க வேண்டும் என ஆறுதல் கூறினான் மகோதரன்.
🌞அமைச்சன் மகோதரன் அறிவுரை கேட்டு சினம் தணிந்தான் ராவணன். இந்திரஜித் உடலை தைல எண்ணையில் வையுங்கள். மேகநாதன் இறப்புக்கு காரணமான பகைவர்களின்,சிரங்களை கொண்டன்றி இலங்கை மீளேன்! என்று வஞ்சினம் கூறிவிட்டு, இராவணன் போர்க்களம் போகிறேன் என்றான்.
🌞என்னலும், எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு, மீண்டு, மன்னவன், 'மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட சின்னமும், அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றிச் சேர்கேன்; தொல் நெறித் தயிலத்தோணி வளர்த்துமின்' என்னச் சொன்னான்.
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌞ராவணனுக்கு சீதையை அடைய முடியவில்லை; அதனால் வந்தது வெறுப்பு: மகன்களை இழந்தான்; அதனால் நேர்ந்தது பரிதவிப்பு; பகைவன் என்பதால் இராமன்பால் எழுந்தது காழ்ப்பு; அனைத்தும் ஒன்று சேர்ந்து ராவணன் பார்வையை, மறுபடியும் போர்க்களம் நோக்கி திருப்பியது.
🌞உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரக்கர் படைகளை, இலங்கைக்கு வரவழைத்தான் இராவணன்.ராவணனின் தூதர்கள்,இராவணனுகாக, புதிதாக வந்து சேர்ந்த ஆயிரம் வெள்ளம், அரக்கர் படைகளை, அறிமுகம் செய்தனர்.
🌞இவர்கள் சாகத் தீவினர், இவர்கள் குசைத் தீவினர் என அங்கு வந்த ஆயிரம் ஆயிரம் படைகளை அறிமுகம் செய்தனர், ராவணனின் தூதர்கள்.இவர்கள் அனைவரும் மேரு மலையை தூள்தூளாக்குவர். இவர்களால் முடியாத செயல்,என்பது உலகில் எதுவும் கிடையாது என்று வந்து சேர்ந்த படைகளின்,சிறப்பை பற்றி கூறினர் தூதர்கள்.
🌞இராவணன், வந்து சேர்ந்த படைகளின் மொத்த எண்ணிக்கையை,பார்வையிட, அங்கிருந்துச் சென்று,இலங்கையில் உள்ள ஒரு உயரமான கோபுரத்தின் மீது ஏறி, சென்று பார்த்தான். படைகளின் எண்ணிக்கை தோராயமாக, ஓராயிரம் வெள்ளம் இருக்கும் என்று தெரிந்து கொண்டான்
.
🌞படைத்தலைவர்கள், ராவணனிடம் தங்களை இலங்கைக்கு அழைத்ததின் காரணம் என்ன?, என்று கேட்டார்கள்.உடனே ராவணன் படைத் தலைவர்களை பார்த்து, இப்போர் ஏற்பட்டதற்கான காரணத்தை,விவரமாக கூறினான்.
🌞இராவணன் சீதை மீது ஏற்பட்ட அளவில்லாத காதல் பற்றியும் கூறினான்.அப்போது அந்த படைதலைவர்கள் கேவலம்! மானிடர்கள் மீதும், குரங்குகள் மீதும் போரிடவா! எங்களை,இவ்வளவு தூரம் இலங்கைக்கு அழைத்தீர்கள்! என்று ராவணனை எள்ளி நகையாடி சிரித்தார்கள்.
🌞புஷ்கரத் தீவின் தலைவன் வன்னி என்பவன்,மட்டும் அரசே! தங்களோடு போர்புரியும் "அந்த மானுடர் இருவர் "யார்?" என்று கேட்டான். உங்களை காட்டிலும் அவர்கள் வலிமையானவர்களா? என்றும் கேட்டான்.
🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪
🌞அப்போது ராவணனின் பாட்டன் மாலியவான் படை தலைவர்களிடம், மானிடர் இருவரோடு இங்கே இலங்கை எல்லைவரை,ஆழ் கடலில் பாலம் அமைத்து, வந்த வானரவீரர்களை,வானரங்கள் என்று அலட்சியம் செய்யாதீர்கள்!. அவர்களில் ஒருவன் பெரிய வாலோடு இங்கு வந்த குரங்கு ரூபத்தில் வந்த ஒருவன், அசோக வனத்தை அழித்து, இலங்கை நகரையும் தீமூட்டிவிட்டு,கரியாக்கி சென்றுவிட்டான். அது மட்டுமின்றி
அவன் பிரம்மாஸ்திரத்தால் உயிர் இழந்து கீழே வீழுந்தவர்களை,கண பொழுதில்,சஞ்சீவி மலையைக் பெயர்த்து கொண்டு வந்து அவர்களை உயிர்பித்துவிட்டான்.
🌞மாலியவான், இராமனை பற்றி திருபாற்கடலை கடைந்த வாலியைக் கொன்றவன் என்றான். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி சீதையை விடுவிப்பது தான்! என்றும் உரைத்தான்.
🌞அதற்கு புஷ்கரத்தீவின் தலைவன் வன்னி,இலங்கை வேந்தரின், தம்பிமார்களும்,மகன்களும் மாண்டபின், "சீதையை விடுவிப்பது தவறு. முன்னமே இதை யோசித்து,செய்திருக்க வேண்டும். சிங்கம் போன்ற இந்திரஜித் மாண்டுபோன பிறகு,செய்வது தக்கதன்று" என்றான்.
🌞இனி பகைவரை வென்று காண்பிப்பது தான் சிறந்தது என்றான் வன்னி. பிறகு அவன் ராவணனைப் பார்த்து, வேந்தனே! இவ்வளவு நடந்த போதிலும், தாங்கள் ஏன்,போருக்குச் செல்லாமல் இலங்கையிலேயே ஒடுங்கி,இருக்கிறீர்கள் எனக் கேட்டான்.
🌞ராவணன்,வன்னி நக்கலாக கேட்ட கேள்வி கண்டு சினமடைந்தான். ராவணன் பின்னர் சுதாரித்து கொண்டு,முதல் நாள் போரில், கோதண்டராமனிடம் தோற்று,பின் வாங்கியதை பற்றி,எதுவும் கூறாமல், எனக்கு மனிதர்கள் மீதும், குரங்குகள் மீதும் போர் செய்ய கேவலமாக இருந்தது,என்று மட்டும் கூறி சமாளித்தான்.
🌞வன்னி நிலமையை,நன்கு அறிந்து,மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை.பிறகு படைத் தலைவர்களோடு இப்போதே நாங்கள் போர்களம் செல்கிறோம். இன்றுடன் போர் முடிந்துவிட்டது என்றே எண்ணிக் கொள்ளுங்கள் அரசே! என்று ராவணனிடம் கூறிவிட்டு, சென்றனர்.
🌞போருக்குச் செல்ல படைகள் தாயாராயின. ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை (மூலபலம்), கூலிப்படை, நாட்டுப் படை, காட்டுப் படை, துணைப்படை,பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர்.
🌞இவற்றில் மூலப்படையே,(தற்காலத்து Task Force) போல தொன்மையானது,என்பதால் சிறப்புடையது. மூலப்படையினர் தாங்களே போர் புரியச் செல்வதாகக் ராவணனிடம்,கூறினார்கள்.
🌞எனினும் இராவணன் தானே வானரப் படையை அழிப்பதாகவும், மூலப்படை இராமனையும் லக்ஷ்மணனையும்,மட்டுமே குறிவைத்துப் போரிட்டுக் தாக்குதல் நடத்த வேண்டும்,என்றும் கேட்டுக் கொண்டான்.
🌞'வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு வழி சென்று, ஊன் அறக் குறைத்து, உயிர் உண்பென்; நீயிர் போய், ஒருங்கே ஆன மற்றவர் இருவரைக் கோறீர்' என்று அறைந்தான் - தானவப் பெருங் கரிகளை வாள் கொண்டு தடிந்தான்
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌞நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட மூலப்படையைக் கண்டு வானரப்படை பயங்கொண்டு ஓடத்தொடங்கியது.நீலன் போய் அவர்களைத் தேற்றி அழைத்து வந்தான்.
🌞மூலப்படையைக் கண்ட வானர வீரர்கள் பயந்து ஓடி ஒளிந்தனர். நீலனும், அங்கதனும் பயந்து ஓடிய வானர வீரர்களை, தடுத்து நிறுத்தி யாரும் பயப்பட வேண்டாம் என்று கேட்டு கொண்டான்.பயந்து ஓடியதை நினைத்து,ஜாம்பவான் கூட அவமானமாக கருதி, வருத்தமடைந்து நின்றான்.
🌞புற்றின் நின்று வல் அரவு இனம் புறப்பட, பொருமி, 'இற்றது, எம் வலி' என விரைந்து இரிதரும் எலிபோல், மற்றை வானரப் பெருங் கடல் பயம் கொண்டு மறுகி, கொற்ற வீரரைப் பார்த்திலது; இரிந்தது, குலைவால்
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞அதற்கு வானரர்கள்,அங்கே பாருங்கள்! அங்கு வருபவர்கள் எல்லாமே வலிமையுள்ள அசுர சேனைகள்.உலகத்தையை அழிக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.
🌞இவர்களுடன் போர் புரிய ஆயிரம் இராமர் வந்தாலும், லக்ஷ்மணர் வந்தாலும் முடியாது. நாம் உயிர் வாழ்வதற்கு மலைகளும், குகைகளும் நிறையவே உள்ளது. பசியாற காய், கனிகள்,ஏராளமாக இருக்கிறது எங்களுக்கு அது போதும் என்று நடுநடுங்கி கூறினார்கள்.
🌞மூலப்படையைப் பற்றியும்,அதன் வலிமை பற்றியும் விபீஷணன் ரகுராமனுக்கு எடுத்துச் கூறினான்.
🌞'இக் கொடும் படை எங்கு உளது? இயம்புதி' என்றான்; மெய்க் கொடுந் திறல் வீடணன் விளம்புவான்: 'வீர! திக்கு அனைத்தினும், ஏழு மாத் தீவினும், தீயோர் புக்கு அழைத்திடப் புகுந்துளது, இராக்கதப் புணரி.
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞அங்கதன், ஜாம்பவானை பார்த்து மதிநலம் மிக்கவரே! தாங்கள் இந்த அசுரபடைகளை எல்லாம் கண்டு அஞ்சலாமா? நீங்கள் தானே சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்கு அனுமனுக்கு தக்க வழி காட்டினீர்கள்.
🌞நம்முடன் இங்கு உடன் இருப்பவர் சாதாரண மனிதர் என்று எண்ணுகிறீர்களா? உலகத்தையே ஆளும், காக்கும், பரம்பொருள் ஶ்ரீமன் நாராயணன்.அவரே மனிதனாக, அவதரித்து வந்திருக்கிறார்.
🌞'சாம்பனை வதனம் நோக்கி, வாலிசேய், "அறிவு சான்றோய்! பாம்புஅணை அமலனே மற்று இராமன்" என்று, எமக்குப் பண்டே ஏம்பல் வந்து எய்தச் சொல்லித் தேற்றினாய் அல்லையோ, நீ? ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய்!
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞நம்மை காக்க விஜயராகவனின் சிறப்பான கோதண்டம் என்ற வில் இருக்கிறது.கோதண்டபாணி சீதாராமன் நிச்சயம் இந்த அசுர சேனைகளை, வென்று விடுவார். அதனால் பயம் சிறிதும் கொள்ள வேண்டாம் என ஆறுதல் கூறி, ஜாம்பாவானை போர்களத்திற்கு அழைத்து வந்தனர் நீலனும், அங்கதனும்.
🌞'தானவரோடும், மற்றைச் சக்கரத் தலைவனோடும், வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி - ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ? மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும்? - மேலோய்!
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠
🌞விபீஷணன் வீரராகவனிடம், பெருமானே! இந்த படைகளை மூலப்படைகள் என்று சொல்வர். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்காகவே, இந்த மூல படைகளை ராவணன்,தேர்ந்தெடுத்து வைத்துள்ளான்.
🌞இவர்கள் ராவணன் இட்ட கட்டளையால்,உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,குறிப்பாக இலங்கையை சுற்றியுள்ள தீவுகளில் இருந்தும்,இங்கு வந்துள்ளார்கள். மூலபலப்படை உலகத்தையே வெல்லும் அளவிற்கு ஆற்றல் படைத்தது என்றான் வீபீஷணன்.
🌞இதை கேட்ட கோதண்டராமன் லக்ஷ்மணரிடம், புதிதாக வந்திருக்கும் மூலபடைகளோடு மிகவும் எச்சரிக்கையாக போர் புரிய வேண்டி இருக்கிறது.ஆதலால் லக்ஷ்மணா! நீ வானரர்களுக்கும்,
வீபிஷணனுக்கும் துணையாக இருக்கவேண்டும். எனவே மாருதியுடனும், சுக்கிரீவனுடன் சென்று, வானர படைகளை யாரும் தாக்காதவாறு முன்நின்று காக்க வேண்டும் என கூறினார்.
🌞ரகுராமன் தான் ஒருவனாகவே, இந்த மூலப்படைகளை, நிர்மூலமாக்கி எதிர்த்து,போரிட்டு அழிக்கிறேன் என்றார்.
🌞'காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால், கவியின் சேனை போக்கு அறப் போகித் தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால்; தாக்கி, இப் படையை முற்றும் தலை துமிப்பளவும், தாங்கி, நீக்குதி, நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம்
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞 வீபீஷணா! நீ அரக்கர்கள் செய்யும் மாயங்களை நன்கு அறிந்தவன். எனவே லக்ஷ்மணருக்கு துணையாக நீயும்,அனுமனும் எப்போதும் இலக்குவனுடன், உடன் இருக்க வேண்டும், என்று அவர்களிடம் கேட்டு கொண்டார் ஶ்ரீராமன்.
🌞'வீடண! நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி, வெம்மை கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி, கொற்றம் நீடுறு தானைதன்னைத் தாங்கினை, நில்லாய் என்னின், கேடு உளது ஆகும்' என்றான்; அவன் அது கேட்பதானான்
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞சுக்கிரீவன்,அங்கதன், நீலன் முதலியோரும், இலக்குவனுடன் சென்று, வானர வீரர்களை காக்க லக்ஷ்மணருடன் சேர்ந்து கொண்டனர்.
🌞சூரியன் சேயும், செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன், ஆரியன் பின்பு போனான்; அனைவரும், 'அதுவே நல்ல காரியம்' என்னக் கொண்டார்; கடற்படை காத்து நின்றார்; வீரியன் பின்னர்ச் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம்;
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞மற்ற வீரர்கள் அனைவரும் வானரப் படைக்குக் காவலாகப் போனார்கள்.தேவர்களும், சிபெருமானும்,பிரம்மதேவனும் இந்த அதிசயப் போரைப் காணவேண்டும் என்று வானவெளியில் ஒன்று கூடி, நின்று கொண்டு இருந்தனர்.
🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟨🟩🟨🟩🟨🟨🟩
🌞பிறகு சீதாராமன் தன் கோதண்டத்தை கையில் எடுத்துக் கொண்டு,மூலப்படையோடு போரிட முன்னணியில் வந்து.நின்றார்.
🌞வில்லினைத் தொழுது, வாங்கி, ஏற்றினான்; வில் நாண் மேருக் கல் எனச் சிறந்ததேயும், கருணை அம் கடலே அன்ன எல் ஒளி மார்பில் வீரக் கவசம் இட்டு, இழையா வேதச் சொல் எனத் தொலையா வாளித் தூணியும் புறத்துத் தூக்கி,
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞தேவர்கள்,ஶ்ரீராமர் ஒருவரால் இந்த அசுர சேனைகளை அழிப்பது கடினம்.இருப்பினும் வீரராகவன் நற்குணத்தில் சிறந்தவர். சிறந்த வில்லாளன்.
🌞அரக்கர்களோ அதர்மம் செய்பவர்கள்.அதர்மத்தை காட்டிலும் தர்மமே இறுதியில் வெல்லும் என்பது நிச்சயம். இப்போரில் அறம் தான் தன் வெற்றியை நிலைநாட்டும் எனக் கூறி, இராமர் போரில் வெற்றி பெற தேவர்களும் சிவபெருமானும் கோதண்டபாணி சீதாராமனை வாழ்த்தினார்கள்.
🌞சீதாராமன், தன் வில்லின் நாணோசையை எழுப்பி அரக்கர்கள் முன் போய் நின்றார். அப்போது அரகர்களுக்கு பல துன் நிமித்தங்கள் தோன்றியது.அரகர்கள் மனம் பதைத்தனர்
🌞ஒரு வில்லியை, ஒரு காலையின், உலகு ஏழையும் உடற்றும் பெரு வில்லிகள், முடிவு இல்லவர், சர மா மழை பெய்வார்; பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய, திருவில்லிகள் தலை போய் நெடு மலைபோல் உடல் சிதைவார்.
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞பிறகு மூலப்படை அரக்கர்கள் துன்நிமித்தங்களை கண்டு அஞ்சாமல், இந்த சிறு மனிதனா நம்மை எதிர்த்து போர் புரிய போகிறான் என ஏளனமாக பார்த்தனர்.மலை போல பலம் கொண்ட நம்மை இந்த எறும்பு கடிக்க முடியுமா என்ன? என ஏளனம் செய்தனர்.இவனை அழிக்க ஒரு நொடி போதும் என கோதண்டராமர் மீது கணகில்லாத பாணங்களை ஏவினர்.
🌞விஜயராகவன் அரகர் படை எய்த எல்லா பாணங்களையும் தடுத்து நிறுத்தி,தன் கோதண்டத்தில் இருந்து ஆயிரம் அம்புகளை, ஒரு சேர தொடுத்து, அரக்கர்களை அழித்தார்.
🌞கோதண்டராமன் அம்புகளை எய்த வேகம், மின்னல் கீற்று போல இருந்தது. நொடி பொழுதில் ஆயிரம் ஆயிரம் அம்புகளை கோதண்டத்தால் இருந்து, தொடுத்து, அப்பாணங்கள்
கடைசியில் ஒரு லட்சம் பாணங்களாக மாறி பாய்ந்து சென்று அரக்கர்களை,அழித்தது. இவ்வாறு நொடி பொழுதில் அரக்கர்களை கொன்று வீழ்த்தினார் ஶ்ரீராமன்.
🌞ஆர்த்த ஓசையோ? அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ? கார்த் திண் மால் கரி முழக்கமோ? வாசியின் கலிப்போ? போர்த்த பல் இயத்து அரவமோ? - நெருக்கினால் புழுங்கி வேர்த்த அண்டத்தை வெடித்திடப் பொலிந்தது, மேன்மேல்
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞ரகுராமன் ஒருவரே பல்லாயிரம், இராமராக உருவம் எடுத்து கொண்டு போரிடுவது போன்ற தோற்றம் அப்போது ஏற்பட்டது. போர்க்களம் முழுவதும் ஒவ்வொரு அரக்க வீரனுடனும், விஜயராகவன் போரிடுவது,போன்ற தோற்றம், எதிரிகளை தள்ளாடி நிலைகுலைய வைத்தது.
🌞முன்னே உளன்; பின்னே உளன்; முகத்தே உளன்; அகத்தின் - தன்னே உளன்; மருங்கே உளன்; தலைமேல் உளன்; மலைமேல் கொன்னே உளன்; நிலத்தே உளன்; விசும்பே உளன்; கொடியோர், 'என்னே ஒரு கடுப்பு!' என்றிட, இருஞ் சாரிகை திரிந்தான்
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
🌞வீரராகவனின் சிறப்பு மிக்க, கோதண்டம் என்ற வில்லின் மணி சப்தம் ஒலிக்கும், போதெல்லாம் அரக்கர்கள், கூட்டம் கூட்டமாக, தாக்குதலுக்கு பதில் சொல்ல முடியாது,இறந்து வீழ்ந்தனர்.
🌞இராமருடைய கோதண்டத்தில் பதினாறு தங்க மணிகளும், பதினாறு கவந்த மணிகளும் மொத்தம், முப்பத்திரண்டு மணிகள் தொங்க விடபட்டுடிருந்தது.
🌞ஆயிரம் யானைகள், பதினாயிரம் தேர் ஒரு கோடி குதிரைகள்,ஆயிரம் சேனை வீரர்கள் இறந்தால் இராமருடைய வில்லில் உள்ள கவந்த மணி ஒரு முறை ஒலிக்கும்.
🌞அந்தக் கவந்த மணி ஆயிரம் முறை ஒலித்தால் பெரிய தங்கமணி பெரிய சப்த்ததோடு கணீரென்று ஒலிக்கும். போரில் இராமருடைய கோதண்டத்தில் உள்ள முப்பத்திரண்டு தங்க மணிகளும் இடைவிடாமல், ஏழரை நாழிகை சப்தம் எழுப்பி ஒலித்ததாம்!
🌞மணி குண்டலம், வலயம், குழை, மகரம், சுடர் மகுடம், அணி கண்டிகை, கவசம், கழல், திலகம், முதல் அகல, துணியுண்டவர் உடல், சிந்தின; சுடர்கின்றன தொடரும் திணி கொண்டலினிடை மின் குலம் மிளிர்கின்றன சிவண
🌞கவிச்சக்கரவர்த்தி கம்பர்
💠🌀💠🌀💠🌀💠🌀💠🌀💠🌀🌀💠🌀
🌀வளரும் 🌀ஶ்ரீராமஜெயம்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🍒 சுபமஸ்து 🙏 தீர்காயுஷ்யமஸ்து.
💥 ஶ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே.
💥 ஶ்ரீமதே நாராயணயாய நம:
✳️ ஶ்ரீமதே ராமானுஜாய நம:
🙏 ராமானுஜ தாஸன்
சம்பத்குமாரன்.
💥பாக்யம். 💠 🌞
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️